பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு: சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறித்த வழக்கில், சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2023-05-16 22:00 GMT

சேலம் கன்னங்குறிச்சி சின்னதிருப்பதி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (வயது 59). இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென்று தமிழரசி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து தமிழரசி கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர்.

மேலும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நகைப்பறிப்பு தொடர்பாக, சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (48) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தங்க சங்கிலியை பறித்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் சீனிவாசனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் தங்க சங்கிலியை பறித்த குற்றத்திற்காக சீனிவாசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிறிஸ்டல் பபிதா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்