வேலூர் கோர்ட்டில் 8 பேர் சரண்
ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு தொடர்பாக வேலூர் கோர்ட்டில் 8 பேர் சரண் அடைந்தனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை
ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் கேசவன் (வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். பைனான்ஸ் தொழில் செய்து வந்ததுடன், செங்கல் சூளையும் நடத்தி வந்தார். கடந்த 19-ந் தேதி தேன்கனிக்கோட்டை தாலுகா என்.கொத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் பணம் வாங்குவதற்காக கேசவன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்தொடர்ந்து காரில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிந்து கேசவனை கொலை செய்துவிட்டு காரில் தப்பி சென்ற 8 பேர் கொண்ட மர்மகும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
8 பேர் சரண்
இந்த நிலையில் ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபர் கேசவன் கொலை வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அல்லேரி நத்தம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (24), மஞ்சுநாத் ரெட்டி (31), ஸ்ரீநாத் (34), முனிராஜ் (30), பண்டேஸ்பரம் கிராமத்தை சேர்ந்த அபிநந்தா (29), முனிராஜ் (31), என்.கொத்தூர் மோகன்குமார் (29), பஜ்ஜய்யப்பள்ளி நாகராஜ் (35) ஆகிய 8 பேரும் நேற்று வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் (ஜே.எம்-4) சரணடைந்தனர்.
அவர்களை மாஜிஸ்திரேட்டு ரோஸ்கலா 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். அதையடுத்து 8 பேருக்கும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.