வழிபறியில் ஈடுபட்ட 8 பேர் கைது
அரக்கோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல்செய்தனர்.
அரக்கோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல்செய்தனர்.
வழிப்பறி
அரக்கோணம் பகுதியில் தொடர் குற்றத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அரக்கோணம் - திருவள்ளூர் ரோட்டில் உள்ள அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ. அருகே மறைவான இடத்தில் இருந்து மர்ம நபர்கள் சிலர் அவ்வழியாக செல்பவர்களிடம் கத்தி, உருட்டுகட்டை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையிலான போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்ததும் கத்தி, உருட்டுக் கட்டை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த நபர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த குரு என்கிற குருபிரசாத் (வயது 26), ஜெகன் (23), சோபன் பாபு (22), அரக்கோணம் காந்தி நகரை சேர்ந்த செந்தில் (21), திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த பிரேம் குமார் (26) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து கத்தி, உருட்டுக் கட்டை, இரும்பு கம்பி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டது.
8 பேர் கைது
இதே போல் காலை 7 மணி அளவில் அரக்கோணம் - சோளிங்கர் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே சிலர் அவ்வழியாக செல்பவர்களிடம் கத்தி, இரும்பு கம்பிகளை காட்டி மிரட்டி வழிப்பறி செய்து, இது குறித்து போலீல் கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி வந்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார், வழிபறியில் ஈடுபட்டிருந்தவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அரக்கோணம் கிருமில்ஸ் பேட்டையை சேர்ந்த கவுதம் (21), வெங்கடேசபுரம் பதியை சேர்ந்த கரன் (21), பெருமுச்சி பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (21) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இந்த இரு சம்பவங்களிலும் சேர்த்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.