கடலூர் தென்பெண்ணையாற்றில் மேலும் 8 தோட்டாக்கள் சிக்கின தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைப்பு

கடலூர் தென்பெண்ணையாற்றில் மேலும் 8 தோட்டாக்கள் சிக்கின. அவற்றை தடயவியல் சோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Update: 2023-09-17 18:45 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடலூரையும், புதுச்சேரி கும்தாமேட்டையும் இணைக்கும் வகையில் தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த கும்தாமேடு தரைப்பாலம் அருகே நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் மீன்பிடிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது, 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்களை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த புதுநகர் போலீசார், இது பற்றி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் அதை பார்வையிட்டு, மேலும் அந்த இடத்தில் தோட்டாக்கள் உள்ளனவா? என்று சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

வெடிக்காத தோட்டாக்கள்

அதன்பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் சிறுவர்கள் தோட்டாக்களை கண்டெடுத்த தென்பெண்ணையாற்றில் தீவிரமாக தேடினர்.

அப்போது அதன் அருகில் தோண்ட, தோண்ட சிறிய மற்றும் பெரிய வகையிலான துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கின. மொத்தம் 6 வகையிலான 169 தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர். அவை அனைத்தும் வெடிக்காத தோட்டாக்கள், பெரும்பாலானவை துரு பிடித்த நிலையில் இருந்தது.

மேலும் 8 தோட்டாக்கள்

தொடர்ந்து அந்த தோட்டாக்களை வீசி சென்றது யார்? எந்த துப்பாக்கியில் போடக்கூடிய தோட்டாக்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அதன் அருகில் மேலும் தோட்டாக்கள், துப்பாக்கிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதினர். இதனால் மீண்டும் அந்த இடத்தில் தேட போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று அதிகாலை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையிலான தனிப்படை போலீசார், ஏற்கனவே தோட்டாக்கள் கிடைத்த அந்த பகுதியில் தென்பெண்ணையாற்றில் தோண்டி பார்த்தனர். அதில் மேலும் 8 தோட்டாக்கள் கிடைத்தன. அதில் 6 பெரிய தோட்டாக்கள், 2 சிறிய தோட்டாக்கள் இருந்தது. இதை கைப்பற்றிய போலீசார், அதன் அருகில் துப்பாக்கி ஏதேனும் உள்ளதா? என்றும் தேடினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைப்பு

இது பற்றி கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபுவிடம் கேட்ட போது, தென்பெண்ணையாற்றில் ஏற்கனவே 169 துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்தன. தற்போது மேலும் 8 தோட்டாக்கள் கிடைத்துள்ளது. இந்த தோட்டாக்கள் பாதுகாப்பு துறையில் உள்ளது தான். ஆனால் எந்த துறையில் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளோம். சோதனை முடிவில் தான் உண்மை நிலவரம் தெரியவரும். துப்பாக்கி தோட்டாக்களை வீசி சென்றது கடலூரை சேர்ந்தவர்களா? அல்லது புதுச்சேரியை சேர்ந்தவர்களா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இருப்பினும் தோண்ட, தோண்ட துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்