8 மாத குழந்தை, நீரிழிவு நோயால் சாவு
நாகையில், 8 மாத குழந்தை நீரிழிவு நோயால் பரிதாபமாக உயிரிழந்தது.
நாகையில், 8 மாத குழந்தை நீரிழிவு நோயால் பரிதாபமாக உயிரிழந்தது.
மூச்சுத்திணறல்
நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி கார்த்திகா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ரூபி என்ற குழந்தை உள்ளது. 8 மாதத்தில் மரியா ஆரோனிக்கா என்ற குழந்தை இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை மரியா ஆரோனிக்காவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மரியா ஆரோனிக்காவை அவளது பெற்றோர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நீரிழிவு நோயால் சாவு
அங்கு மரியா ஆரோனிக்காவை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் மரியா ஆரோனிக்காவுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து தனி மருத்துவ குழுவினர் மரியா ஆரோனிக்காவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை குழந்தை மரியா ஆரோனிக்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்ததை அறிந்த அவளது பெற்றோர் கதறி அழுதனர்.
நாகையில் நீரிழிவு நோயால் 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.