வங்கி கணக்கில் ரூ.8¾ லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக புகார்
வங்கி கணக்கில் ரூ.8¾ லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக புகார்
திருப்பூர்
திருப்பூரை சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.8¾ லட்சம் கையாடல் செய்ததாக கூறி சம்பந்தப்பட்ட வங்கி முன் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கி முன் தர்ணா
திருப்பூர் சாமுண்டிபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 55). திருப்பூர் ரெயில் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தபோது விருப்ப ஓய்வு பெற்றார். இவர் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்கி அதில் சம்பளம் பெற்று வந்தார்.
இந்தநிலையில் அவருடைய பென்சன் பணத்தை அந்த வங்கியில் உள்ள சிலர், வரைவோலையில் போலி கையெழுத்து போட்டு கையாடல் செய்து விட்டதாக கூறி நேற்று காலை சம்பந்தப்பட்ட வங்கி முன்பு சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கடன் முழுவதையும் கட்டினேன்
கடந்த 2019-ம் ஆண்டு திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் வங்கி கிளையில் இருந்து ரூ.3½ லட்சம் கடன் பெற்றேன். அதற்கான தவணைத்தொகையை செலுத்தி வந்தேன்.
இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றேன். அப்போது கிடைத்த பணத்தை எடுத்து தனியார் வங்கிக்கு சென்று கடந்த 6-8-2021 அன்று கடன் பாக்கியாக இருந்த ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்தை கொடுத்து கடனை முழுவதுமாக கட்டி முடித்து ரசீதை பெற்றேன்.
ரூ.8¾ லட்சம் கையாடல்
அதன்பிறகு எனக்கான பென்சன் தொகை தனியார் வங்கி கணக்கில் வந்தது. அந்த பணத்தை வரைவோலை மூலமாக என்னை போன்று போலியாக கையெழுத்து போட்டு வங்கியை சேர்ந்தவர்கள் பணத்தை கையாடல் செய்துள்ளனர். ஏ.டி.எம். மூலமாகவும் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.8 லட்சத்து 78 ஆயிரம் எனது வங்கிக்கணக்கில் இருந்து கையாடல் செய்யப்பட்டுள்ளது. வங்கிக்கு சென்று கேட்டால் அவர்கள் முறையாக பதில் அளிக்காமல் உள்ளனர். திருப்பூர் மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்து 3 மாதம் ஆகியும் நடவடிக்கை இல்லை. இதனால் வேறு வழியின்றி சம்பந்தப்பட்ட தனியார் வங்கி முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து வடக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.