நீலகிரிக்கு 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

கோடை சீசனில் நீலகிரிக்கு 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

Update: 2023-06-02 21:00 GMT

ஊட்டி

கோடை சீசனில் நீலகிரிக்கு 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

கோடை சீசன்

நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி சீசன் தொடங்கியது. தொடர்ந்து ஏப்ரல் 14-ந் தமிழ் புத்தாண்டு முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த மாதம் 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற்றது. குறிப்பாக கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 5 நாட்கள் 125-வது மலர் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை 1½ லட்சம் பேர் கண்டு ரசித்தனர்.

8½ லட்சம் பேர் வருகை

கோடை விழாவையொட்டி வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். இதன்படி வார நாட்களில் தினமும் 25 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில் 30 ஆயிரம் பேரும் வந்தனர்.

இதனால் லவ்டேல் சந்திப்பு, சேரிங்கிராஸ் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் தாவரவியல் பூங்கா, பைக்காரா படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்த கோடை சீசனில் மட்டும் 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கடந்த ஆண்டு 7½ லட்சம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதை ஒப்பிடும் போது, கடந்த ஆண்டை விட கூடுதலாக 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். இதன்மூலம் தோட்டக்கலைத்துறைக்கு ரூ.6.20 கோடி வருமானம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு கூடுதலாக ரூ.1.20 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்