16,834 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8¼ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16,834 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

Update: 2022-12-22 18:50 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16,834 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

சான்றிதழ் வழங்கும் விழா

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத் திறனாளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ், பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ், 63 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 38 ஆயிரத்து 960 மதிப்பிலான உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.8¼ கோடி நலத்திட்ட உதவி

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையினை தமிழக முதல்-அமைச்சர் தனது கட்டுப்பாட்டில் வைத்து எண்ணற்ற புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழகத்திலேயே முன்மாதிரியாக மாற்றுத்திறனாளிகளை வீடு வீடாக சென்றும், ஆங்காங்கே வட்டார அளவிலான முகாம்கள் மூலமாகவும் கண்டறிந்து அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிப்பது மிகவும் கடினமான காரியம். அதற்காகவே நான் மற்றும் எனது குடும்பம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியினை ராணிப்பேட்டையில் நடத்தி, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் பெற்றோர்களின் கஷ்டங்களில் பங்கெடுத்து வருகின்றோம். இது கடவுளுக்கு செய்கின்ற சேவைக்கு இணையானது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரையில் 16,834 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8 கோடியே 33 லட்சத்து 18 ஆயிரத்து 520 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சி அரங்கு

முன்னதாக விஸ்வாஷ், அன்னை, ஸ்மார்ட் ஸ்கூல், நேசம், பெஸ்ட் நியூ லைன் ஆகிய மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் செய்த கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்கினை அமைச்சர் பார்வையிட்டார்.

விழாவில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, ஒன்றியக் குழு தலைவர் சேஷா வெங்கட், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்