பட்டாக்கத்தி, அரிவாளுடன் 8 பேர் கைது
பழனியில் பட்டாக்கத்தி, அரிவாளுடன் சுற்றித்திரிந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது.
பட்டாக்கத்தி, அரிவாள்
பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி பழனி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார், பழனி பாண்டியன்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பொன்காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக 8 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது, பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்கள் 8 பேரையும் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
8 பேர் கைது
விசாரணையில், அவர்கள் பழனி சிவகிரிப்பட்டியை சேர்ந்த முத்து (வயது 26), தனுஷ்குமார் (19), ஆயக்குடியை சேர்ந்த அர்ஜூன்குமார் (19), கண்ணன்குமார் (28), ராம்குமார் (20), மதுரை மாவட்டம் கீழமுத்துப்பட்டியை சேர்ந்த சரவணன் (23), பிரேம்நாத் (22) மற்றும் பழங்காநத்தத்தை சேர்ந்த சரவணன் (21) என்பது தெரியவந்தது.
இவர்கள் பழனி பகுதியில், கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கைதான முத்து மீது அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.