நீலகிரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 798 வழக்குகளுக்கு தீர்வு

நீலகிரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 798 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-02-12 19:00 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 798 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட புதிய நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை (லோக் அதாலத்) மாவட்ட முதன்மை நீதிபதி முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு வழக்குகளுக்கு சமரசம் செய்து வைத்தார்.

இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், மகளிர் நீதிமன்ற நீதிபதி நாராயணன், நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஸ்ரீதர், கூடுதல் மகளிர் நீதிபதி மோனிகா, உரிமையியல் நீதிபதி மோகன கிருஷ்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் தமிழினியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதேபோல் கோத்தகிரி நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி வனிதா, குன்னூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி சந்திரசேகர், குற்றவியல் நீதித்துறை நடுவர் இசக்கி மகேஷ்குமார், குற்றவியல் நீதிபதி அப்துல் சலாம் ஆகியோர் தலைமையில் நடந்தது. கூடலூர் நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி பிரகாசம், குற்றவியல் நீதிபதி சசிகுமார், உரிமையியல் நீதிபதி சிவக்குமார் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

532 வழக்குகளுக்கு தீர்வு

இதில் நீதிமன்றத்தில் நிலுவயில் இருந்த வழக்குகளில் சுமார் 842 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, 532 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அதன் மதிப்பு ரூ.2 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 937 ஆகும். வங்கிகளில் வாராக்கடன் சம்பந்தமாக 677 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு அவற்றில் 266 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ரூ.4 கோடியே 15 லட்சத்து 67 ஆயிரத்து 23 ஆகும். மொத்தம் 798 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.6 கோடியே 56 லட்சத்து 64 ஆயிரத்து 960-க்கு தீர்வு காணப்பட்டது.

முன்னதாக மாவட்ட நீதிபதி முருகன் கூறுகையில், மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமரச முறையில் தீர்வு காணப்படுகிறது. இதன் மூலம் முடிக்கப்படும் வழக்குகளில் முத்திரைதாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப கிடைக்கும். மேலும் நேரம், பண விரயம், மன உளைச்சல் தவிர்க்கப்படுகிறது. எனவே இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்