ஊராட்சி தலைவர் உள்பட 3 பதவிகளுக்கான இடைத்தேர்தலில் 76 சதவீத வாக்குப்பதிவு

தேனி மாவட்டத்தில் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பதவிகளுக்கான இடைத்தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவானது.

Update: 2022-07-09 16:11 GMT

இடைத்தேர்தல்

தேனி மாவட்டத்தில் காலியாக இருந்த 9 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 5 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பெரியகுளம் நகர்மன்ற 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர், சின்னஓவுலாபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் ஆகிய 3 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டியிட்டனர்.

இதற்காக இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி, அழகாபுரி, அம்மாபுரம், பின்னத்தேவன்பட்டி, சொக்கத்தேவன்பட்டி ஆகிய இடங்களில் 12 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. டி.வாடிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்டனர். அங்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. சின்னஓவுலாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் போட்டியிட்டனர். இதற்காக அந்த ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரத்தில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இந்த 14 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இதனால் காலையிலேயே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்களிக்க வந்த மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சானிடைசர் வழங்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

மக்கள் பலரும் முக கவசம் அணிந்து வந்து வாக்களித்தனர். அதே நேரத்தில் அலுவலர்கள், போலீசார் பலரும் முக கவசம் அணியாமல் பணியாற்றினர். அதுபோல் வாக்களிக்க சமூக இடைவெளியின்றி மக்கள் வரிசையில் காத்திருந்தனர். பலரும் தங்களின் குழந்தைகளுடன் வந்து வாக்களித்தனர்.

பலத்த பாதுகாப்பு

அம்மாபுரத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வரிசையில் நின்ற முதியவர்கள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் வரிசையில் ஆங்காங்கே அமர்ந்து இருந்தனர். முதியோர்களுக்கு தனி வரிசையோ, அவர்கள் அமருவதற்கு இருக்கை வசதியோ வாக்குச்சாவடியில் இல்லை. வாக்குச்சாவடிகளுக்கு அருகில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஆதாரவாளர்கள் நின்று கொண்டு தங்களின் சின்னங்களை கூறி மக்களிடம் வாக்குகேட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இதனால் வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதி காலை முதல் மாலை வரை பரபரப்பாக காணப்பட்டது.

வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாலையில் வாக்குப்பதிவு

மொத்தம் 76.07 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 9,872 வாக்காளர்களில் 7,510 பேர் வாக்களித்தனர். வடபுதுப்பட்டியில் 9,297 வாக்காளர்களில் 7,031 பேர் வாக்களித்தனர். அது 75.63 சதவீத வாக்குப்பதிவு. டி.வாடிப்பட்டியில் 126 வாக்காளர்களில் 103 பேர் வாக்களித்தனர். அது 81.75 சதவீத வாக்குப்பதிவு. சின்னஓவுலாபுரத்தில் 449 வாக்காளர்களில் 376 பேர் வாக்களித்தனர். அது 83.74 சதவீத வாக்குப்பதிவு ஆகும். பின்னர் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன. பின்னர் அவை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்