புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 757 போலீசார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 757 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாகன தணிக்கை
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் சார்பில், இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றினை கண்காணிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும்.
மேலும் குற்றங்களை தடுக்க நொடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் -5, நான்கு சக்கர ரோந்து வாகனங்கள்-10, இரு சக்கர ரோந்து வாகனங்கள் -55 மூலமாக கண்காணிக்கப்படும். புத்தாண்டு அன்று மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள், 2-க்கும் மேற்பட்ட நபர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியவற்றினை தடுக்க மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் 757 பேர்
போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து காவல் குழுவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் குற்றப்பிரிவு தனிப் படையும், சட்ட விரோத செயல்கள் நடைபெறாவண்ணம் டிரோன்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த பாதுகாப்பு பணியில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 99 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 757 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் குடி போதையில் வாகனம் ஓட்டுவது, அதி வேகமாக ஓட்டுவது, வாகனம் ஓட்டிக்கொண்டே செல்போனில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பது, 2-க்கும் மேற்பட்ட நபர்களுடன் இரு சக்கர வாகனங்களில் செல்வது போன்றவை விபத்துக்கு வழிவகுக்கும். எனவே இவற்றை தவிர்த்து இளைஞர்கள் சந்தோஷமாக எவ்வித விபத்தும் இல்லாமல் இந்த புத்தாண்டினை கொண்டாட வேண்டும்.
இளைஞர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமால் பார்த்துக் கொள்ள வேண்டும். மேற்கூறியவற்றை மீறி செயல்படுபவர்கள் மீது காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.