2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் 755 பேர் தேர்ச்சி
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ராமநாதபுரத்தில் நடைபெற்ற 2-ம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் 755 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ராமநாதபுரத்தில் நடைபெற்ற 2-ம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் 755 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2-ம் நிலை காவலர்
தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகள் மாநிலம் முழுவதும் கடந்த 6-ந்தேதி முதல் தொடங்கி 11-ந்தேதி வரை நடைபெற்றது.
இதன்படி ராமநாதபுரம். சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த தேர்வு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் கடந்த 6-ந்தேதி முதல் நடைபெற்றது. ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த தேர்விற்கு ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 987 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
755 பேர் தேர்ச்சி
இந்த தேர்வில் முதல் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் மார்பளவு சரிபார்க்கப்பட்ட பின் 1500 மீட்டர் ஓட்டம் மற்றும் கயிறு ஏறுதல் உள்ளிட்ட உடல் திறன் தேர்வுகள் நடைபெற்றன. இதில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 755 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97 பேர் தேர்ச்சி பெறவில்லை. 135 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. மாநிலம் முழுவதும் நடைபெற்ற தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணத்தின் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அதன் பின்பு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.