பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 7,537 பேர் எழுதினார்கள்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 7,537 பேர் எழுதினார்கள்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 7,537 பேர் எழுதினார்கள். தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.
பிளஸ்-1 தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு நேற்று தொடங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 3,775 பேரும், மாணவிகள் 4,285 பேரும் சேர்த்து 8,060 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாணவர்கள் 3,441 பேரும், மாணவிகள் 4,096 பேரும் சேர்த்து 7,537 பேர் தேர்வு எழுதினார்கள். இதில், மாணவர்கள் 334 பேரும், மாணவிகள் 189 பேரும் சேர்த்து 523 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வசதியாக 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனித்தேர்வர்கள் பிளஸ்-1 தேர்வு எழுத லதாங்கி மெட்ரிக் பள்ளியில் தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். வினாத்தாள்கள் வைக்கப்பட்டு இருந்த மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு அலுவலர்கள் எடுத்து சென்றனர்.
பறக்கும் படை சோதனை
தேர்வர்களை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதை தவிர தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கபறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. பறக்கும்படையினர் அவ்வப்போது ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சோதனை செய்தனர்.
இதுதவிர அந்தந்த தேர்வு மையங்களில் நிலையான பறக்கும்படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் மற்றும் மாணவ-மாணவிகள் எழுதுவதை பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்வு எளிதாக இருந்தது
தேர்வு எழுதிய மாணவி ஹர்சினி கூறுகையில், வழக்கமான தேர்வை விட பொதுத்தேர்வு எழுத செல்லும் போது கொஞ்சம் பயமாக இருந்தது. இருப்பினும் கடவுளை வேண்டிக் கொண்டு தேர்வு மையத்திற்கு சென்றேன். வினாத்தாளை வாங்கி படித்ததும் மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால் பெரும்பாலும் புத்தகத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. இதனால் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
மாணவி காயத்ரி கூறுகையில், பிளஸ்-1 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் உள்பட அனைத்து வினாக்களும் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டன. மேலும் பள்ளியில் நடத்தப்பட்ட மாதிரி தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளும் இருந்தது. இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும் என்றார்.