கோவையில் பம்புசெட் உற்பத்தி 75 சதவீதம் சரிவு

கோவையில் பம்புசெட் உற்பத்தி 75 சதவீதம் சரிவு

Update: 2022-08-22 16:57 GMT

கோவை,

மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக கோவையில் பம்புசெட் உற்பத்தி 75 சதவீதமாக சரிந்து உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பம்புசெட் உற்பத்தி

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் ஏராளமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பம்புகள் உலகளவில் சிறந்து விளங்குகின்றன. நாடு முழுவதும் விவசாயம் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் பம்புசெட்டுகளில் 50 சதவீதத்துக்கும் மேல் கோவையில் உற்பத்தி செய்யப்படும் பம்புசெட்டுகள்தான் ஆகும்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு பம்புசெட் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கு தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், மேற்கு வங்காளம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான மற்றும் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

மூலப்பொருள் விலை உயர்வு

இந்த நிலையில் மூலப்பொருட்கள் உயர்வு, ஜி.எஸ்.டி. உயர்வு ஆகியவை காரணமாக உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இது குறித்து கோவையை சேர்ந்த பம்புசெட் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள பம்புசெட் நிறுவனங்களுக்கு குஜராத், டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் இருந்துதான் மூலப்பொருட்களான காப்பர், உருக்கு பொருளான காஸ்டிங், ஸ்டீல் ராடுகள் உற்பத்தி செய்யப்பட்டு கோவைக்கு கொண்டு வரப்படுகிறது. காப்பர் கிலோ ரூ.500 ஆக இருந்தது தற்போது ரூ.1000-மாகவும், காஸ்டிங் ரூ.60-ல் இருந்து ரூ.100 ஆகவும், ஸ்டீல் ராடுகள் ரூ.70-ல் இருந்து ரூ.140 ஆகவும் உயர்ந்து உள்ளது.

உற்பத்தி 75 சதவீதம் குறைவு

இதன் காரணமாக ஒரு பம்புசெட் தயாரிக்க ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. உற்பத்தி, மின்சாரம், கூலி ஆகியவற்றை சேர்த்து அதில் இருந்து 20 சதவீதம் உயர்த்தி விற்பனை செய்ய வேண்டும். ஆனால் மூலப்பொருட்கள் விலை உயர்ந்தாலும் பெரிய நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பம்புசெட் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் நாங்களும் விலையை உயர்த்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

இதன் காரணமாக 3 ஆயிரம் சிறு குறு பம்புசெட் உற்பத்தி நிறுவனங்களில் வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே வேலை நடந்து வருகிறது. இதனால் தினமும் 25 ஆயிரம் பம்புசெட் உற்பத்தி செய்தது 75 சதவீதம் குறைந்து தற்போது 5 ஆயிரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் பலர் மாற்று வேலைக்கும் சென்றுவிட்டனர்.

மூலப்பொருட்கள் வங்கி

மேலும் பெரிய நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி.யே சிறு குறு நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்டு வருகிறது. அதை 5 சதவீதமாக குறைத்தால் எங்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும். அத்துடன் மூலப்பொருட்கள் விலை உயர்வை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்து மூலப்பொருட்கள் வங்கி அமைத்து கொடுத்தால் மட்டுமே பம்புசெட் தொழிலை பாதுகாக்க முடியும்.

எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மூலப்பொருட்கள் வங்கியை அமைத்து, குறைந்த விலையில் பொருட்களை வாங்கிக்கொடுத்து பம்புசெட் தொழிலை பாதுகாப்பதுடன், தொழிலாளர்கள் வேலை இழப்பதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்