மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி 75 சதவீதம் நிறைவு

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி 75 சதவீதம் நிறைவு பெற்று உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-07-25 16:26 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி 75 சதவீதம் நிறைவு பெற்று உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ள சேதங்கள்

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாய் வழியாக ஜமீன்ஊத்துக்குளியில் உள்ள கிருஷ்ணா குளத்திற்கு செல்கிறது. இந்த கால்வாயில் பருவமழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், கால்வாயையொட்டி உள்ள வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்து விடுகிறது. இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் வெள்ள சேதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் மழைநீர் வடிகாலும் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சுகாதார பிரிவு ஆய்வாளர்கள் சீனிவாசன், சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

75 சதவீத பணி நிறைவு

பொள்ளாச்சி நகரில் சேகரமாகும் கழிவுநீர் சாக்கடை கால்வாய் மூலம் கிருஷ்ணா குளத்திற்கு செல்கிறது. மரப்பேட்டை முதல் கண்ணப்ப நகர் வரை கால்வாய் 5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. மேலும் மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் சேர்த்து மொத்தம் 123 கிலோ மீட்டர் உள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழையையொட்டி வெள்ள சேதங்களை தடுக்க தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

சிறு பாலங்கள், கால்வாய் போன்றவை எந்திரங்கள் மூலம் தூர்வாரப்படுகிறது. எந்திரங்கள் செல்ல முடியாத இடங்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வரை தூர்வாரும் பணி 75 சதவீதம் நிறைவு பெற்று உள்ளது. ஒரு வார காலத்திற்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்