திருப்பூரை போன்று நாட்டில் 75 நகரங்களை உருவாக்க வேண்டும்
திருப்பூரை போன்று நாட்டில் 75 நகரங்களை உருவாக்க வேண்டும்
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் கடந்த 37 ஆண்டுகளில் 2 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளதாகவும், திருப்பூரை போன்று நாட்டில் 75 நகரங்களை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கலந்துரையாடல்
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுடன் மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். மேலும் அவருக்கு பாராட்டு விழாவும் திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்திய ஏற்றுமதி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:-
திருப்பூரைப் பொறுத்தவரை ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு உற்பத்தி நடைபெறுகிறது. 6 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 4 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகவாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். கடந்த 1985-ம் ஆண்டில் திருப்பூரின் ஏற்றுமதி ரூ.15 கோடியாக மட்டுமே இருந்தது. கடந்த மார்ச் மாதம் வரை ஓராண்டில் ஏற்றுமதி அளவு ரூ.30 ஆயிரம் கோடி ஆகும். கடந்த 37 ஆண்டுகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழில் 2 ஆயிரம் மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
தொழில்முனைவோர்
கூட்டு முயற்சியின் மூலமாக தொடர்ச்சியாக ஆண்டுதோறும் 23 சதவீத சராசரி வளர்ச்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெற்றுள்ளனர். உலகில் வேறு எந்த தொழில் நகரமும் இத்தகைய வளர்ச்சியை பெற்றது கிடையாது. திருப்பூர் தொழில் துறையை பொறுத்தவரை தொழிலாளர் பற்றாக்குறை அதிக அளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்றைய இளைஞர்களும், இளம்பெண்களும் அரசு வேலைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு, அவற்றை தேடிக் கொண்டிருக்காமல் திருப்பூரில் உள்ள தொழில் துறையினரைப் போன்று தொழில் முனைவோராக மாற வேண்டும். நாட்டில் ஜவுளித் துறை சார்ந்து மட்டும் 4 முதல் 5 கோடி பேர் உள்ளனர்.
ஏற்றுமதி மட்டும் ரூ.3.5 லட்சம் கோடியளவுக்கு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடி ஏற்றுமதி துறையாக மாற வேண்டும். நாடு 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், 75 திருப்பூர்களை நாட்டின் வெவ்வேறு நகரங்களில் உருவாக்க வேண்டும். அந்த ஒவ்வொரு நகரமும் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி செய்ய வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
உலக அளவில் தற்போது இந்தியாவானது மிகவும் வேகமாக பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள நாடாக உள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 30 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய ஏற்றுமதி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ.சக்திவேல் பேசும்போது, இந்திய வணிக பொருட்களின் ஏற்றுமதி வர்த்தகம் 422 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியதற்கும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கும், விரைவில் ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதற்கும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்காக மத்திய மந்திரிக்கு அனைத்து தொழில் துறையினர் சார்பில் நன்றி தெரிவித்தார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் பேசும்போது, திருப்பூருக்கு பின்னலாடை துறைக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும். நூல் விலை உயர்வு பிரச்சினையில் அரசு தலையிட்டு, உடனடியாக அதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் ஜவுளி தொழில்துறையினரை பாதுகாக்கும் வகையில் 100 லட்சம் பேல் நூல்களை வாங்கி இருப்பு வைக்க வேண்டும். என்றார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் சைமா சங்கம் சார்பில் துணை தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி, சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், டீமா சங்க தலைவர் முத்துரத்தினம், நிட் பிரிண்டர்ஸ் சங்கம் சார்பில் ஸ்ரீகாந்த் உள்பட பல்வேறு சங்கத்தினர் தொழில்துறைக்கு தேவையான கோரிக்கைகளை மனுவாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, கோவை எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட அரசுத்துறை அதிகாரிகள், பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அவினாசியை அடுத்த ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி ஆயத்த ஆடை உற்பத்தி தொழில் பூங்காவை அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் திருப்பூர் வந்த அமைச்சர்களுக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக நியூ திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க்கில் உள்ள தொழில்பூங்காவை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் எல்.முருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.
------------------
கட் டிசி
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும்
7 மெகா ஜவுளி பூங்கா
-மந்திரி எல்.முருகன் பெருமிதம்
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்திய ஜவுளித்துறை உலக அளவில் வழிகாட்டியாக திகழ்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் சேவை, ஏழை, எளியோர் நலன், நல்லாட்சி உள்ளிட்ட 3 தாரக மந்திரங்களுடன் செயல்பட்டு வருவதுடன், இந்தியாவை ஒரு ஆற்றல்மிக்க தேசமாக மாற்றி உள்ளது. திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் பஞ்சு மற்றும் நூல் விலையேற்றத்தால் பாதிக்கப்படுகிறோம் என்று தெரிவித்தபோது, உடனடியாக பஞ்சு இறக்குமதிக்கு இருந்த வரியை உடனடியாக நீக்கிய பெருமை மத்திய அரசையே சாரும்.
தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று மூன்றே மாதத்தில் பிரீ டிரேடு அக்ரிமெண்ட் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஐக்கிய அரபு நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தமான நிலையில் தற்போது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பேசி வருகிறோம். இந்த திட்டத்தின் மூலம் இந்த பகுதியில் உள்ள ஜவுளித் தொழில்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.
பிரதமரின் லட்சியக் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 7 மெகா ஜவுளி பூங்காக்களை தந்தது நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாகும். ஆயத்த ஆடை தயாரிப்புக்கான அனைத்து பணிகளும் இதுபோன்ற ஜவுளி பூங்காக்களில் ஒரே இடத்தில் நடைபெறும்போது சர்வதேச அளவில் தொழில் போட்டியாளர்களை எதிர்கொள்ள பெரும் உதவியாக அமையும்.
இவ்வாறு அமைச்சர் எல்.முருகன் பேசினார்.
----
3 காலம்
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசியபோது எடுத்தபடம்.