73 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்
நெல்லை மாவட்டம் முழுவதும் 73 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் முழுவதும் 73 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்
தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் சாதாரண வைரசால் ஏற்படும் சளி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் 73 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது. நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு, காய்ச்சல் அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகளில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது.
வீடு வீடாக சென்று பரிசோதனை
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் 21 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கொண்ட தெருக்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அதிகம் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.
பள்ளிக்கூடங்களில்...
பள்ளிக்கூடங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை, மாலை என இரண்டு வேளைகளாக பிரிக்கப்பட்டு, அதிக காய்ச்சல் கண்டறியப்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் முகாம்களிலேயே தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், சளி பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர், ஓ.ஆர்.எஸ். குடிநீர் போன்றவற்றை வழங்கினர்.