54 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 7,107 பேர் போட்டி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 54 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 7,107 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

Update: 2022-12-02 18:05 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 54 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 7,107 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

7,107 பேர் போட்டி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 54 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் பணி அமர்த்தும் பொருட்டு இணைய வழியில் 6,849 விண்ணப்பங்களும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து 258 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 7,107 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.‌ இதற்காக ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி, சோளிங்கர் எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோளிங்கர், குட்லெட் மேல்நிலைப் பள்ளி, கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி, நெமிலி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் நெமிலி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் கைனூர் டாக்டர்வி.ஜி.என் .மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகாலம்மன் நகர், கைனூர் கிராமம், அரக்கோணம், எஸ்.எம்.எஸ்.விமல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நுழைவுச்சீட்டு

இணைய வழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பத்தில் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் நுழைவுச் சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது http:/agaram.tn.gov.in/onine forms/formpageopenphp?d=43-174 என்ற இணையதளத்தில் சென்று பதிவு எண்ணையும், செல்போன் எண்ணையும் உள்ளீடு செய்து நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலை வாய்ப்பகம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச்சீட்டு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதாரர்கள் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 9.50 மணிக்கு பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் காலை 10.50 மணிக்கு முன் தேர்வறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நுழைவுச்சீட்டு இல்லாமல் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் கருப்பு பந்துமுனைப் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் கருப்பு பந்து முனை பேனாவை தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் கொண்டு வர அனுமதி கிடையாது.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்