7 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டுள்ளது
நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 7 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டுள்ளது என வனச்சரக அலுவலர் தெரிவித்தார்.
நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 7 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டுள்ளது என வனச்சரக அலுவலர் தெரிவித்தார்.
ஆலிவ் ரெட்லி ஆமைகள்
நாகை சாமந்தான்பேட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட வனத்துறை சார்பில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு வனச்சரக அலுவலர் ஆதிலிங்கம் தலைமை தாங்கினார்.
இளநிலை வன ஆராய்ச்சியாளர் தீபா ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்த காணொளி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் வனச்சரக அலுவலர் ஆதிலிங்கம் பேசும் போது கூறியதாவது:-
7 ஆயிரம் முட்டைகள் சேகரிப்பு
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அரிய வகை இனமான ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டை இடுவதற்காக நாகை கடற்கரை பகுதிக்கு வருகிறது. அவ்வாறு, முட்டைகள் இட வரும் ஆமைகளை கண்டறிந்து அவற்றின் முட்டைகள் சேகரிக்கப்படுகின்றன.
பின்னர் வனத்துறைக்கு சொந்தமான சாமந்தான்பேட்டை, காமேஸ்வரம், விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சுகள் பொரிப்பகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இதுவரை 7 ஆயிரம் ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடல்வளத்தை பாதுகாக்க வேண்டும்
எனவே, முட்டை இடுவதற்காக கடற்கரையோரம் வரும் ஆமைகளை விலங்குகள் மற்றும் சமூக விரோதிகளிடம் இருந்து எந்த இடையூறும் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும். ஆமை முட்டைகள் குறித்த தகவல் கிடைத்த உடன் வனத்துறையினருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும், மீன்வளத்தை பெருக்க வேண்டும் என்றால், இந்த அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமை இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் மாணவ- மாணவிகள், மீனவ கிராம மக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.