மினிலாரியில் கடத்தப்பட்ட 700 கிலோ கஞ்சா பறிமுதல்

பேராவூரணி அருகே மினிலாரியில் கடத்தப்பட்ட 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2022-08-24 20:12 GMT
தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், இவைகளை கடத்தி வந்து விற்பனை செய்பவர்களை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பேராவூரணி பகுதியில் மினிலாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. உடனே பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் உதவியுடன் தனிப்படையினர் பேராவூரணி அருகே பின்னவாசல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கஞ்சா பறிமுதல்

அப்போது அந்த வழியாக மினிலாரி ஒன்று வேகமாக வந்தது. அந்த மினிலாரியை தனிப்படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த மினி லாரியில் பொட்டலம், பொட்டலமாக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மினிலாரியுடன் கஞ்சா பொட்டலங்களை தனிப்படையினர் பறிமுதல் செய்ததுடன் அவைகளை பேராவூரணி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த மினிலாரியில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது, இந்த கஞ்சா பொட்டலங்கள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இந்த கஞ்சா பொட்டலங்களை எங்கே கொண்டு செல்கிறார்கள்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மினிலாரியில் எவ்வளவு கிலோ கஞ்சா இருந்தது என்பதை எடை போட்ட பிறகு தான் தெரியவரும் எனவும், சுமார் 700 கிலோ முதல் 750 கிலோ கஞ்சா வரை இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவரம் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் நாகை போதைப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பேராவூரணிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்