பொதுமக்களுக்கு வழங்க 70 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்
சங்கராபுரம் அருகே பொதுமக்களுக்கு வழங்க 70 ஆயிரம் மரக்கன்றுகள் தயாராக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சங்கராபுரம்,
தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சரின் பசுமையாக்கல் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக காடுகள் கோட்ட வன அலுவலர் ஷஷாங் கஷ்யப்ரவி உத்தரவுப்படி, இன்னாடு வனச்சரக அலுவலர் ஸ்ரீகோகுல் அறிவுரையின் படி வனத்துறை மூலம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.குளத்தூர் ஏரிக்கரை அருகில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் தேக்கு, மா, வேம்பு, பூவரசு, நாவல், நீர்மருது, மகோகனி, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகை மரங்கள் என்று மொத்தம் 70 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. மரக்கன்றுகளை பெற்று நடவு செய்து வளர்க்க ஆர்வமுள்ள பயனாளிகள் ஆதார் கார்டு நகல் 2, புகைப்படம், விவசாயிகளாக இருந்தால் நிலத்தின் சிட்டா நகல் ஆகியவற்றை அளித்து இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். அதே போல் வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள், ஏரி, குளங்கள் என்று பொது இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்கவும் மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன. எனவே விருப்பமுள்ள பயனாளிகள் எஸ்.குளத்தூர் ஏரி அல்லது கள்ளக்குறிச்சியில் வ.உ.சி.நகர் 6-வது குறுக்கு தெருவில் இயங்கி வரும் இன்னாடு வனச்சரக அலுவலகத்தில் வனவர்கள் ராஜேந்திரன், பிரதீப் குமார் ஆகியோரை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.