அனுமதியின்றி செயல்பட்ட 70 மதுக்கடை பார்களுக்கு சீல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 70 பார்கள் ஒரே நாளில் மூடி சீல் வைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 70 பார்கள் ஒரே நாளில் மூடி சீல் வைக்கப்பட்டன.
மது குடித்த 2 பேர் பலி
தஞ்சையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதியின்றி செயல்பட்ட பாரில் மதுக்குடித்த 2 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்டு வரும் பார்களை மூட அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பார்களை கணக்கெடுத்து அதனை மூடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 118 மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் 22 பார்கள் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீல் வைப்பு
ஆனால், அனுமதியின்றி உரிமம் பெறாமல் மதுக்கடைகளின் அருகில் பல பார்கள் செயல்பட்டு வந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் 70 பார்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதை அறிந்த அதிகாரிகள் அதனை நேற்று மூடி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்படி ராமநாதபுரம் பகுதியில் 11 பார்களும், பரமக்குடி பகுதியில் 16 பார்களும், கமுதியில் 5 பார்களும், ராமேசுவரம் பகுதியில் 5 பார்களும், கீழக்கரையில் 11 பார்களும், திருவாடானையில் 12 பார்களும், முதுகுளத்தூரில் 10 பார்களும் என மொத்தம் 70 பார்கள் மூடி சீல்வைக்கப்பட்டன. டாஸ்மாக் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மேற்கண்ட பார்களை காலை முதல் சீல் வைத்தனர். இதுநாள் வரை மேற்கண்ட 70 பார்கள் அரசு அனுமதியின்றி மதுக்கடைகள் திறக்கும் முன்னரும், அடைக்கப்பட்ட பின்னரும் மதுபானங்களை சர்வ சாதாரணமாக விற்பனை செய்து வந்ததும், அதிகாரிகள் அதனை சோதனையிட்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததும் அதிர்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.