வங்காநரியை பிடித்து நரிப்பொங்கல் கொண்டாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை-வனத்துறையினர் எச்சரிக்கை

வங்காநரியை பிடித்து நரிப்பொங்கல் கொண்டாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-10 21:08 GMT

வாழப்பாடி:

சுவரொட்டிகள்

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் பொங்கல் திருநாளை நிறைவு செய்யும் வகையில் கரிநாள் அன்று வயல் வெளிகளில் சுற்றித்திரியும் வங்கா நரியை பிடித்து வந்து நரியை தெய்வமாக வணங்கும் நரிப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா பாரம்பரியமாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் வனத்துறை சார்பில் வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையம், ரெங்கனூர், கொட்டவாடி உள்பட பல்வேறு கிராமங்களில் வங்காநரியை பிடித்து நரிப்பொங்கல் கொண்டாடினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு

ஆனால் கிராம மக்கள் நாங்கள் பாரம்பரியமாக பல ஆண்டுகளாக கொண்டாடப்படும் நரிப்பொங்கல் விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே வங்காநரி பிடிப்பதை தவிர்த்து பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாழப்பாடி வனத்துறை சார்பில், ரெங்கனூர், சின்னம்மநாயக்கன்பாளையம் கிராமங்களில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமை தாங்கினார். இதில் வனவிலங்கான வங்காநரியை பிடித்து வழிபடுவதும், அதைவைத்து ஜல்லிக்கட்டு நடத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். எனவே, வங்காநரியை பிடிப்பதை கைவிட வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முகாமில் வனத்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்