நகை கொள்ளை வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு

நகை கொள்ளை வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

Update: 2022-11-17 21:37 GMT

விவசாயி வீட்டில் கொள்ளை

சேலம் விநாயகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 53), விவசாயி. இவர் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தார்.

அப்போது வீட்டிற்குள் 6 பேர் திடீரென புகுந்தனர். பின்னர் அவர்கள் முனியப்பன் மற்றும் அவரது மனைவி, குடும்பத்தினரை கத்தி முனையில் மிரட்டி 15 பவுன் நகை, செல்போன், விலை உயர்ந்த கைக்கெடிகாரம், மோட்டார் சைக்கிள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். அதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் முனியப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட, மேட்டூர் அடுத்த நாட்டாமங்கலம் மாதையன்குட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பண்ணன் (48) உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

7 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய கருப்பண்ணனை தவிர மீதமுள்ள 5 பேர் கடந்த 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி கருப்பண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிரிஸ்டல் பபிதா தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்