தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஊட்டி
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் தொல்லை
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தங்கி இருந்து தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்களுக்கு தலா ஒரு பெண் குழந்தை உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு தொழிலாளர்களின் பிள்ளைகளான 8 வயது சிறுமி 3-ம் வகுப்பும், 10 வயது சிறுமி 5-ம் வகுப்பும் குன்னூர் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தனர்.
அந்த பள்ளியில் குன்னூர் அருவங்காடு உபதலை பகுதியை சேர்ந்த அப்புசாமி (வயது 55) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். 7.11.2016-ந் தேதி அவர் மதிய உணவு இடைவேளையின் போது, அந்த 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் இந்த செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து உள்ளார்.
தலைமை ஆசிரியர் கைது
இதுகுறித்து மாணவிகள் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதில் 2 மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் யமுனாதேவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிறை தண்டனை
2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அப்புசாமிக்கு 3 பிரிவுகளின் கீழ் தலா 7 ஆண்டு என 2 சிறுமிகளுக்கும் சேர்த்து 42 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மாலினி ஆஜராகி வாதாடினார்.
தொடர்ந்து அப்புசாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியர் அப்புசாமி ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.