7 டன் மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்ய தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 7 டன் மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்ய தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 7 டன் மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்ய தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மறு சுழற்சி
அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து நகராட்சி குப்பைக்கிடங்கில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம்பிரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளான மக்காத குப்பைகள் அனைத்தும் தனியாக பிரிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மறுசுழற்சி செய்வதற்காக தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் முயற்சியை நகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி அறிவுறுத்தலின் படி தனியார் சிமெண்டு நிறுவனத்திற்கு அருப்புக்கோட்டை நகராட்சி குப்பைக்கிடங்கில் இருந்து 7 டன் மக்காத குப்பைகள் அனுப்பப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தெரிவித்தார்.
நவீன எந்திரம்
இதேபோல் மக்காத குப்பைகள் அனைத்தும் மறுசுழற்சி செய்வதற்காக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், அருப்புக்கோட்டையில் உள்ள வாருகால்களில் மழைநீர் செல்ல வழியின்றி நீண்ட காலமாக அடைபட்டு கிடந்த குப்பைகள் அனைத்தும் விருதுநகர் நகராட்சி மூலம் பெறப்பட்ட நவீன எந்திரம் மூலம் முழுவதும் அகற்றப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் வாருகால்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மழைநீர் தங்குதடையின்றி செல்லும். இதனால் மழைகாலங்களில் சாலைகளில் மழைநீர் செல்வது குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.