7 பேருக்கு தலா 4 ஆண்டுகள் ஜெயில்
போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை செய்த வழக்கில் 7 பேருக்கு தலா 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
போலி ஆவணம்
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் தனியார் பள்ளி நடத்தி வருபவர் ராகிலன் எபன்ஸ் (வயது 60). இவர் கடந்த 2007-ம் ஆண்டு சுமார் 7 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இந்தநிலையில் 2008-ம் ஆண்டு அவரது நிலத்தை கோட்டூர் கிராமத்தை சேர்ந்த முருகன் அவரது சகோதரர் சக்திவேல் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களான சத்தியவாணி, ருக்மணி மங்கை, காளியம்மாள் மற்றொரு காளியம்மாள் ஆகியோர் சேர்ந்து வேறு ஒரு நபருக்கு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளனர்.
இது குறித்து அப்போதைய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் இந்த வழக்கு திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
7 பேருக்கு ஜெயில்
மேலும் இதுதொடர்பான வழக்கு வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டு திருமால் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் உள்ளிட்ட 7 பேருக்கு 2 பிரிவுகளில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் இந்திராமிசையல் ஆஜராகி வாதாடினார்.