காற்றாலையில் திருடிய 7 பேர் கைது
ஆலங்குளம் அருகே தனியார் காற்றாலையில் காப்பர் ஒயர் திருடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். ரூ.10.50 லட்சம் மதிப்பிலான ஒயரை மீட்டனர்
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே தனியார் காற்றாலையில் காப்பர் ஒயர் திருடிய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். ரூ.10.50 லட்சம் மதிப்பிலான ஒயரை மீட்டனர்.
காற்றாலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டிக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை உள்ளது. அந்த காற்றாலை கடந்த 2 ஆண்டுகளாக இயங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த காற்றாலையை தற்போது வேறொரு நிறுவனம் விலைக்கு வாங்கி பழுதான நிலையில் இருந்த காற்றாலையை பழுது பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் காற்றாலையின் உள்பகுதியில் சத்தம் கேட்டுள்ளது. அதை கவனித்த காவலாளி காற்றாலை அருகே வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே காற்றாலையின் தரப்பில் ஆலங்குளம் போலீஸ் நிலையத்திலும், தீயணைப்பு மீட்பு நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து காற்றாலை அலுவலகத்தில் பார்வையிட்டனர்.
திருட்டு
அப்போது அங்கு விலை உயர்ந்த காப்பர் ஒயர்கள் சுமார் 600 கிலோ, கம்ப்யூட்டர், பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.10.50 லட்சம் ஆகும்.
மேலும் அலுவலகம் அருகில் உள்ள காற்றாடியில் சிறு, சிறு துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்ட காப்பர் வயர்கள் கிடந்தன. திருடியவர்கள் மீண்டும் வந்து இவற்றை ஏற்றி செல்லலாம் என வைத்து விட்டு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து திருடர்கள் விட்டுச் சென்ற காப்பர் ஒயர்களை ஆலங்குளம் போலீசார் கைப்பற்றினர்.
7 பேர் கைது
தொடர்ந்து இந்த திருட்டு வழக்கில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேமராவில் சந்தேகத்திற்கிடமான கார் மற்றும் மினி லாரி வந்திருந்த காட்சி பதிவாகி இருந்தது. அவற்றை கொண்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் காற்றாலையில் திருடியவர்கள் காப்பர் ஒயரை விற்பனை செய்து விட்டு மீண்டும் திரும்ப வரும்போது போலீசாரிடம் சிக்கினர்.
விசாரணையில் அவர்கள், திருவள்ளுர் மாவட்டம் மாதவரத்தை சேர்ந்த தங்கவேலு மகன் சதிஷ்குமார் (வயது 32), திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் சின்னத்துரை மகன் பிரபாகரன் (44), சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த பூபாலன் மகன் விஜயகுமார் (28), ஸ்ரீவில்லிபுத்தூர் இனாம் கரிசல்குளம் குருவையா மகன் சிவக்குமார் (40), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ராசு மகன் ரவிச்சந்திரன் (41), செங்குன்றம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் சுரேந்தர் (34), கும்மிடிப்பூண்டி வில்சன் நேசக்குமார் மகன் ஆன்ரன் செல்வகுமார் (37) ஆகியோர் என தெரியவந்தது. அந்த 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மீட்பு
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான காப்பர் ஒயர்களை போலீசார் மீட்டனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பழுதான காற்றாலையை நோட்டமிட்டு அதில் இருந்த காப்பர் ஒயர்களை இந்த கும்பல் திருடியது தெரியவந்தது. ைகதானவர்களை ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.