ரூ.38 லட்சம் கள்ள நோட்டுகள் சிக்கிய வழக்கில் மேலும் 7 பேர் கைது
சங்கரன்கோவிலில் ரூ.38 லட்சம் கள்ள நோட்டுகள் ேபாலீசாரிடம் சிக்கிய வழக்கில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பகுதியில் நேற்று முன்தினம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியதில், பெட்டிகளில் கத்தை கத்தையாக ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. மேலும் அவற்றை ஈரோட்டில் இருந்து கோவில்பட்டி வழியாக சங்கரன்கோவிலுக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.38 லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் வேலூர் மாவட்டம் காட்பாடி, ஈரோடு பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கள்ளநோட்டு விவகாரத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? அவர்கள் கள்ளநோட்டுகளை இங்கு கொண்டு வந்தது ஏன்? என்பது உள்ளிட்டவை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், நாமக்கல் மாவட்டம் இலந்தகோட்டையைச் சேர்ந்த பூபதி (வயது 43), ஈரோடு பட்டேல் ரோட்டை சேர்ந்த ஞானசேகரன் (32), நாமக்கல் குமாரபாளையம் சங்கிலி அக்ரஹாரத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் சீனிவாசன் (22), சரவணன் (35), செந்தில்குமார் (48), அவரது மனைவி முத்துமாரி (38), ஈரோடு கிருஷ்ணபாளையத்தை சேர்ந்த சிவகுமார் (33) ஆகிய மேலும் 7 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 3 பெண்கள் உள்பட 14 பேரும் சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.