தனியார் கல்லூரியில் ரூ.7 லட்சம் மோசடி

மாணவர்கள் செலுத்திய கட்டணத்துக்கு போலி ரசீது கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக முதல்வர், ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-06-22 20:30 GMT

பீளமேடு

மாணவர்கள் செலுத்திய கட்டணத்துக்கு போலி ரசீது கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக முதல்வர், ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் கல்லூரி

கோவை பீளமேட்டில் லோட்டஸ் விஷன் ரிசர்ச் என்ற டிரஸ்ட் சார்பில் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு பியாரி (வயது 45) என்பவர் முதல்வராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இங்கு படித்து வரும் மாணவ-மாணவிகள் கல்வி கட்டணம் செலுத்தும்போது கல்லூரி முதல்வரும், ஊழியர் ஜாய்ஸ் நித்யா (35) என்பவரும் சேர்ந்து ரசீது கொடுத்து உள்ளனர். அந்த ரசீது மீது மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ரூ.7 லட்சம் மோசடி

இது குறித்து மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதை தொடர்ந்து நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கல்லூரி கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில் ரூ.7 லட்சத்து 1,500 மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதாவது கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை மாணவ-மாணவிகள் செலுத்தும் கல்வி கட்டணத்தை பியாரி, ஜாய்ஸ் நித்யா ஆகியோர் சேர்ந்து, கல்லூரி வங்கி கணக்கில் செலுத்தாமல், தங்களின் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, மாணவர்களுக்கு போலி ரசீது கொடுத்தது தெரியவந்தது.

முதல்வர்-ஊழியர் மீது வழக்கு

இது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் அந்த கல்லூரி முதல்வர் பியாரி, ஊழியர் ஜாய்ஸ் நித்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

----

Reporter : J.JOSEPH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore

மேலும் செய்திகள்