தீயில் எரிந்து 7 வீடுகள் நாசம்

தீயில் எரிந்து 7 வீடுகள் நாசம்

Update: 2023-08-06 18:45 GMT

மன்னார்குடி அருகே தீவிபத்தில் 7 வீடுகள் எரிந்து நாசமானது. இதில் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

தீவிபத்து

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்ணாவூர் ஊராட்சி தரிசுவேலி கிராமத்தில் நேற்று மதியம் சிலர் மூங்கில் மரங்களை தீயிட்டு எரித்துள்ளனர். அப்போது வேகமாக வீசிய காற்றில் அருகில் இருந்த முருகையன் என்பவர் வீட்டிற்கு தீ பரவியது. வீட்டின் கூரையில் புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகையன் தூங்கிக்கொண்டிருந்த 2 வயது குழந்தையை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் முருகையன் வீடு முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

இந்த தீவிபத்தில் வீட்டின் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த தீ முருகையனின் மகன் கார்த்தி மற்றும் சாமிநாதன், தமிழரசன், மனோகரன், அழகேசன், அறிவழகன் ஆகியோரின் கூரை வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த மன்னார்குடி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ரூ.7 லட்சம் பொருட்கள் சேதம்

இந்த தீ விபத்தில் முருகையன் வீட்டில் தனது மகள்களின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 15 பவுன் நகைகள், இருசக்கர வாகனங்கள், கிரைண்டர், மிக்சி, டி.வி. மற்றும் பணம் உள்ளிட்ட ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

தகவல் அறிந்ததும் மன்னார்குடி தாசில்தார் கார்த்தி சம்பவ இடத்திற்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார். தீவிபத்துக்கான காரணம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்