சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடந்தது.
சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சோளிங்கர் உள்வட்டத்திற்குட்பட்ட சோளிங்கர், சோம சமுத்திரம், வெங்குப்பட்டு, பரவத்தூர் உள்ளிட்ட 15 வருவாய் கிராமங்களின் வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் அளித்த மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது.
சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள நீர்நிலை மற்றும் ஏரி நீர் பாசன கால்வாயை ஆக்கிரமித்து தனிநபர் கட்டியுள்ள கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நகராட்சி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மற்றும் அரசு மருத்துவமனை அருகே ஏரி பாசன கால்வாயில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தை அகற்றி நீர் நிலை மற்றும் ஏரி பாசன கால்வாய்களை பாதுகாக்க வேண்டும் என காங்கிரஸ் நகர தலைவர் டி.கோபால் மனு அளித்தார்.
கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் (நீதியியல்) விஜயகுமார், தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் அருட்செல்வம், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், கிராமநிர்வாக அலுவலர்கள் ராஜகோபால், சானு, கணேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நில அளவிற்காக வைக்கப்பட்டிருந்த நில அளவீடு சங்கிலியை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் பார்வையிட்டு உறுதி செய்தார்.