69 மகளிர் சுயஉதவி குழுக்களுக்குரூ.5 கோடியில் கடனுதவி

நாகையில் 69 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5 கோடியில் கடனுதவியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

Update: 2023-06-30 18:45 GMT


நாகையில் 69 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5 கோடியில் கடனுதவியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

கடன் உதவி வழங்கும் முகாம்

நாகை மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் முருகேசன், மாவட்ட முன்னோடி மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், 69 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5 கோடியே 16 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களை வறுமையில் இருந்து மீட்க மகளிர் திட்டத்தால் உருவாக்கப்பட்டது தான் சுய உதவிக் குழு ஆகும். ஒரு மகளிர் உறுப்பினருக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் கடன் உதவி என ஒரு குழுவிற்கு என்று எடுத்துக்கொண்டால் 20 லட்சம் ரூபாய் வரையும் வழங்கப்பட்டு வருகிறது.

பெண் கொத்தனார்

100 சதவீதம் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் மகளிர் திட்டம் வழங்கும் வட்டி மானியத்தை பெற இயலும். கடனுக்கு உண்டான தவணைகளை உரிய காலத்தில் செலுத்தி நன்மதிப்பை பெற்று, மீண்டும் அதிகப்படியான கடன் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். ராமநாதபுரத்தில் நான் கலெக்டராக பணியாற்றும்போது சுய உதவி குழுவில் உள்ள பஞ்சாயத்து தலைவி ஒருவரிடம், கட்டிடம் கட்ட பெண்களால் முடியுமா என்று கேட்டேன். அதற்கு முடியும் என்று தெரிவித்த அவர், வீடு கட்டும் கொத்தனார் பயிற்சி பெற்று, மகளிர் சுய உதவிக்குழுவினருடன் சேர்ந்து அங்கன்வாடி கட்டிடத்தை கட்டினர்.

அரசு கட்டிடம் கட்ட...

தற்போது அவருடன் 40 பெண்கள் கொத்தனாராக பயிற்சி எடுத்து வருகின்றனர். பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்காக இதனை உங்களிடம் நினைவு கூறுகிறேன். எனவே நாகை மாவட்டத்தில் பயிற்சி பெற்ற பெண் கொத்தனார் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அரசு கட்டிட கட்டுமான பணி வழங்கப்படும் என்றார்.

முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ராகேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட கிளை வங்கி மேலாளர்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்