ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 66 பேர் கைது
ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 66 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே தாமரைபூண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலையின் சுரங்கத்தின் முன்பு அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுனர் நல சங்கம் மற்றும் சுரங்கத்தில் பணிபுரியும் ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 4 முதல் 13 ஆண்டுகளாக பணிபுரியும் சிமெண்டு ஆலைகளுக்கு நிலம் கொடுத்த ஒப்பந்த டிரைவர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அகில இந்திய ஓட்டுனர் சங்க தலைவர் சுரேஷ் தலைமையில் ஏராளமானோர் சுரங்க அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். இதனை அறிந்த தளவாய் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஆலை நிர்வாகத்தினர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதனை தொடர்ந்து அங்கிருந்த குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையிலான போலீசார், 10 பெண்கள் உள்பட 66 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது இதனைக் கண்டித்து டிரைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.