சுற்றுலா துறை சார்பில் ரூ.6.57 கோடியில் தங்கும் விடுதி-புதிய கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
சுற்றுலா துறை சார்பில் ரூ.6.57 கோடியில் கட்டப்பட்டு உள்ள தங்கும் விடுதி-புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சென்னை,
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வாயிலாக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திருச்சிக்கு வருகைபுரியும் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழ்நாடு ஓட்டலில் 19 ஆயிரத்து 238 சதுர அடி பரப்பில் தங்கும் விடுதி மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள், தொழில் கூட்டங்கள் நடத்துவதற்கு 110 பேர் இருக்கை வசதி கொண்ட கூட்ட அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
சிதம்பரம், மதுரை
கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கும், அங்கு நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி பணிகளை ஒருங்கிணைப்பதற்கும், சிதம்பரம் நகரில் புதிய சுற்றுலா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், கடலூர் மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் இந்த அலுவலகத்தின் வாயிலாக சிறப்பாக மேற்கொள்ளப்படும்.
மதுரை மாநகர், கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா தர்கா மற்றும் மஸ்ஜித் வக்ப் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தலமாகும். இங்கு நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு அதிகளவில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் வருகை புரிகின்றனர். அவர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஓய்வுக்கூடங்கள், பொருட்கள் வைப்பறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் ஆகிய கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொத்தம் ரூ.6.57 கோடி செலவில் திருச்சி தமிழ்நாடு ஓட்டலில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் கூட்டரங்கம், சிதம்பரத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா அலுவலக கட்டிடம் மற்றும் மதுரை கோரிப்பாளையம் தர்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் வசதிகள் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் 27-ந் தேதி (நேற்று) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பங்கேற்றோர்
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்தில் இருந்து சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், திருச்சியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்தியநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.