650 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

பெங்களூருவில் இருந்து காரில் கடத்திய 650 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-28 12:41 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழியாக சொகுசு காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேக்தாவூத் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர் அருகே கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், கருக்காம்பட்டி புறவழிச்சாலை சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக, திண்டுக்கல் நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. இதனைக்கண்ட போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினர். காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னசந்திரம் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 25) என்று தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காருக்குள் மூட்டை, மூட்டையாக புகையிலைப் பொருட்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து காரில் இருந்து 650 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக புகையிலை பொருட்களை கடத்திச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்