உடுமலைப்பேட்டை அருகே உள்ள 6.5 ஏக்கர் நிலத்தை பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்

உடுமலைப்பேட்டை அருகே உள்ள 6.5 ஏக்கர் நிலத்தை 12 வாரத்துக்குள் பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2022-10-23 21:45 GMT

சென்னை,

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு சொந்தமாக கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள மெய்வாடி கிராமத்தில் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கோவிலுள்ள சாமிக்கு இனாமாக (கிராண்ட்) கொடுக்கப்பட்டது. பின்னர், இனாம் ஒழிப்பு சட்டத்தில் 1963-ம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டு அப்போதைய தலைமை நீதிபதி கே.வீராசாமி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்து, இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

அடமானம்

இதற்கிடையில், இந்த நிலத்தின் உரிமையாளர் என்று கூறி செல்லப்பன் என்பவர் ரூ.15 ஆயிரத்துக்கு பழனிச்சாமி என்பவருக்கு 1988-ம் ஆண்டு அடமானம் வைத்துள்ளார். பின்னர் இந்த நிலம் தொடர்பாக உடுமலைப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோவில் நிர்வாகம் ஒரு தரப்பாக சேர்க்கப்படவில்லை. இதுதெரிந்து கோவில் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கோவில் இணை ஆணையர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

உத்தரவு ரத்து

உரிமையியல் சட்ட நடைமுறையின்படி இந்த வழக்கை கீழ்கோர்ட்டு சரியாக விசாரிக்கவில்லை. ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை மறைத்து உடுமலைப்பேட்டை கோர்ட்டில் மோசடியாக உத்தரவை எதிர்மனுதாரர்கள் பெற்றுள்ளனர். எனவே, கீழ்கோர்ட்டு உத்தரவு நிறைவேற்றமுடியாத உத்தரவு ஆகும்.

உடுமலைப்பேட்டை கோர்ட்டு உத்தரவை ரத்து செய்கிறேன், இந்த 6.5 ஏக்கர் நிலம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு சொந்தமானது. எனவே, இந்த நிலத்தை 12 வாரத்துக்குள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்