'நீட்' தேர்வில் அரசு பள்ளிகளை சேர்ந்த 63 மாணவ-மாணவிகள் தேர்ச்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வில் அரசு பள்ளிகளை சேர்ந்த 63 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 24 பேருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Update: 2023-06-14 18:25 GMT

'நீட்' தேர்வு வெளியீடு

இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 7-ந் தேதி நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்தவர்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 122 பேர் 'நீட்' தேர்வினை எழுதினர். அவர்களுக்கு முன்னதாக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் கற்பகத்தின் நேரிடையான மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 முடித்த 95 பேர் 'நீட்' தேர்வு எழுதினர். இந்த நிலையில் 'நீட்' தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது.

அரசு பள்ளிகள்

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த 5 மாணவர்களும், 18 மாணவிகளும் என மொத்தம் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மேலும் அதில் தமிழக அரசின் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்றால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 3 மாணவர்களுக்கும், 4 மாணவிகளுக்கும் என மொத்தம் 7 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் விவரம் வருமாறு:-

செட்டிகுளம் அரசு பள்ளியை சேர்ந்த பிரவீன், பாடாலூர் அரசு பள்ளியை சேர்ந்த அபினேஷ்ராஜா, வசந்த், பூலாம்பாடி அரசு பள்ளியை சேர்ந்த ஹலிதா பேகம், துங்கபுரம் அரசு பள்ளியை சோந்த இன்பநிலா, கை.களத்தூர் அரசு பள்ளியை சேர்ந்த பிரியதர்ஷினி, அபிநயா ஆகியோர் ஆவார்கள். 7 பேரில் 3 பேர் முதல் முறையாக எழுதிய 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மாதிரி பள்ளி

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 முடித்து 'நீட்' தேர்வு எழுதிய 95 பேரில், 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் அதில் தமிழக அரசின் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்றால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 8 மாணவர்களுக்கும், 9 மாணவிகளுக்கும் என மொத்தம் 17 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் விவரம் வருமாறு:-

சிவா, அஜய், ஸ்ரீமதி, ஷர்ஷிகா, சுஷ்மிதா ஆகியோர் ஆவார்கள். இவர்கள் அனைவரும் முதல் முறையாக 'நீட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே 'நீட்' தேர்வு எழுதி மீண்டும் எழுதிய அரசு மாதிரி மாணவ-மாணவிகளில் புகழேந்தி, பூவரசன், தமிழரசன், புவனா, இனியா தமிழ், தினேஷ் கார்த்திக், ஷாலினி, சாந்தி, காயத்ரி, மனோஜ்குமார், கனிஷா, பாலாஜி ஆகியோர் ஆவார்கள்.

முதல் மதிப்பெண் 531

பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வில் முதல் மதிப்பெண் 531 ஆகும். அந்த மதிப்பெண்ணை புகழேந்தி என்ற மாணவர் பெற்றார். பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளையும், அதில் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளவர்களையும் கலெக்டர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வு எழுதியதில், 50 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 5 பேர் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு 13 பேர் கூடுதலாக மொத்தம் 63 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவா்களில் 24 பேருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த 2020-ம் கல்வியாண்டில் 6 பேரும், கடந்த 2021-ம் ஆண்டில் 5 பேரும் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்