வெள்ளிப்பட்டறை உரிமையாளர் வீட்டில் 615 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் திருட்டு

சேலத்தில் வெள்ளிப்பட்டறை உரிமையாளர் வீட்டில் 615 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் திருட்டு போனதாக மைத்துனர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-12 19:30 GMT

சேலத்தில் வெள்ளிப்பட்டறை உரிமையாளர் வீட்டில் 615 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் திருட்டு போனதாக மைத்துனர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிபட்டறை

சேலம் குகை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர், தனது வீட்டின்கீழ் பகுதியில் வெள்ளிப்பட்டறை வைத்துள்ளார். மேல் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பன்னீர்செல்வமும், அவரது மைத்துனர் சத்தியநாராயணனும் சேர்ந்து வெள்ளிப்பட்டறை நடத்தி வந்துள்ளனர்.

அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

615 கிலோ வெள்ளி திருட்டு

இதற்கிடையே நேற்று காலை வெள்ளிப்பட்டறை உரிமையாளர் பன்னீர்செல்வம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், கன்னங்குறிச்சியில் என்னுடைய தாய் வசித்து வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்க்க சென்றிருந்தேன்.

பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்த 615 கிலோ வெள்ளி கட்டி, கொலுசுகள் மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவற்றை தனது மைத்துனர் சத்தியநாராயணன் திருடி சென்றுவிட்டதாகவும், இது குறித்து விசாரித்து வெள்ளி பொருட்களை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதேசமயம், வெள்ளி பொருட்கள், பணத்தை சத்தியநாராயணன் தான் திருடி சென்றாரா? அல்லது முன்விரோதத்தில் புகார் தெரிவித்து பன்னீர்செல்வம் நாடகம் ஆடுகிறாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்