அரசு மருத்துவமனைகளில் 600 வகை மருந்துகள் இருப்பு

பற்றாக்குறை புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 600 வகை மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-10-13 18:45 GMT

மருந்து கிடங்கில் ஆய்வு


திண்டுக்கல் கோபாலசமுத்திர குளக்கரையில் உள்ள மாவட்ட மருந்து கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளின் இருப்பு விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்கள் அதற்கான கோப்புகளை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது;-


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் விவசாயிகளுக்கு மூலிகை பயிர்கள் வளர்ப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் மூலிகை பயிர்கள் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கும் இதுபோன்று பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். குஜராத், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் மூலிகை பயிரான அஸ்வகந்தா அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்த பயிரை தமிழகத்திலும் சாகுபடி செய்து அதன் மூலம் ஆயிரம் கோடி மதிப்பில் வர்த்தகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


600 வகை மருந்துகள்


அஸ்வகந்தா விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டி தரும் பயிராக மட்டுமில்லாமல் சித்த மருத்துவத்துக்கு பயன்படும் முக்கிய மூலிகையாகவும் உள்ளது. ஆடலூர், பன்றிமலையில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் அமைக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையாக உள்ளது என 74 புகார்கள் வந்தது.


அந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மருந்து பற்றாக்குறை இல்லாத வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 600-க்கும் மேற்பட்ட மருந்து வகைகள் தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ளது.


கடும் நடவடிக்கை


தமிழகத்தில் 32 இடங்களில் மருந்து கிடங்குகள் உள்ளன. இருந்த போதிலும் மேலும் 5 மாவட்டங்களில் ரூ.30 கோடியில் மருந்து கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட இருக்கின்றன. போலி டாக்டர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தகவல் தெரிவிக்க வேண்டும்.


அவ்வாறு தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் பொதுமக்களும் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து விற்பனை கடைகளில் மருந்துகளை வாங்கி பயன்படுத்தாமல் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


பேட்டியின்போது, எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், மருத்துவக்கல்லூரி டீன் ராஜஸ்ரீ, கண்காணிப்பாளர் வீரமணி, மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


முன்னதாக கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூரில் அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் சித்தா மருத்துவ பிரிவு, பிரசவ படுகை அறை, மருந்து மாத்திரைகள் வழங்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அவர் பார்வையிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்