ஒரே நாளில் 600 டன் குப்பைகள் அகற்றம்
போராட்டம் வாபஸ் ஆனதால் தூய்மை பணியாளர்கள் நேற்று பணிக்கு திரும்பினர். ஒரே நாளில் 600 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
போராட்டம் வாபஸ் ஆனதால் தூய்மை பணியாளர்கள் நேற்று பணிக்கு திரும்பினர். ஒரே நாளில் 600 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
வேலை நிறுத்த போராட்டம்
கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 2-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கடந்த 4-ந் தேதி முதல் பணிக்கு திரும்பினர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் கூறியபடி, மாநகராட்சி கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாள் (25-ந் தேதி) முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
குப்பைகள் தேங்கின
அவர்கள் பணிக்க செல்லாமல் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம், அந்தந்த மண்டல அலுவலகங்கள் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் வெடித்த பட்டாசு குப்பைகள் 2 டன்னுக்கும் மேலாக தேங்கிக்கிடந்தன. இந்த நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பணிக்கு திரும்பினர்
உடனே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று வழக்கம்போல் பணிக்கு திரும்பினர். அவர்கள் கோவையில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 600 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு 800 முதல் 1,000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரமாகும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக 1,000 டன் குப்பைகள் தேங்கியது. தற்போது தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பியதால் 600 டன் குப்பைகள் நேற்று ஒரே நாளில் மட்டும் அகற்றப் பட்டது என்றனர்.