திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி திருட்டுத்தனமாக கடத்தப்படுவதாக திருவள்ளூர் ரெயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ஏ.கே. பிரித் உத்தரவின் பேரில், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் மற்றும் போலீசார் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் 23 மூட்டை ரேஷன் அரிசியுடன் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார்கள். இதை தொடர்ந்து போலீசார் அங்கு இருந்த 23 மூட்டையில் இருந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை போலீசார் திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.