வாடிவாசலில் இருந்து 600 காளைகள் சீறிப்பாய்ந்தன

வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து 600 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 7 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-01-29 18:46 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப் போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்ைட, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

7 பேர் காயம்

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், சில்வர் பாத்திரங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, அறந்தாங்கி, பொன்னமராவதி, விராலிமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்