அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

தியாகதுருகம் மற்றும் ரிஷிவந்தியம் பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-05-07 18:45 GMT

ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரம், எடுத்தனூர், கரையாம்பாளையம், சீர்ப்பனந்தல், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் நெற்பயிர்கள் சாகுபடி செய்து பராமரித்து வந்தனர்.

இதனால் பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயராகி வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ரிஷிவந்தியம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்து வருகிறது.

நிவாரணம் வழங்க வேண்டும்

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அதிக செலவு செய்து நெற்பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வந்தோம். அறுவடைக்கு சில வாரங்களே இருந்த நிலையில் கோடை மழையால் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மழையால் சேதமடைந்த நெற் பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து எங்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தியாகதுருகம்

இதேபோல் தியாகதுருகம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக கூத்தக்குடி கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் நெற்கதிர்கள் விவசாய நிலங்களில் முளைத்து வீணாகி வருகிறது. இதைபார்த்து விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ்.40 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து பராமரித்து வந்த நிலையில், தற்போது மழையால் அவை அனைத்தும் சேதமடைந்து விட்டதால் அவர்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர். இதை தவிர்க்க தங்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்