பயோமைனிங் முறையில் குப்பைகளை அழிக்க ரூ.60 கோடியில் திட்டம்
வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை அழிக்க ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை அழிக்க ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கு
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு 800 டன் முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. அவை அனைத்தும் வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது.
இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தரம் பிரிக்கப் படாத குப்பைகள் 9 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு குவிந்தது.
சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் குவிந்த குப்பைகளால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
பயோ மைனிங் முறை
இதைத்தொடர்ந்து 45 கோடியே 9 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகளை அழிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதற்கு ஓரளவு பலன் கிடைத்தது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 45 ஏக்கரில் பரவிக்கிடந்த 8.5 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகள் அழிக்கப்பட்டன. இதையடுத்து மீதம் உள்ள குப்பைகளை பயோ மைனிங் மூலம் அழிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
முதற்கட்டமாக 9 லட்சம் கியூபிக் மீட்டர் தரம்பிரிக்கப்படாத குப்பைகள் அழிக்கும் பணி இறுதி கட்டத்தை அடைந்து உள்ளது.
2-ம் கட்டமாக 10 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகளை அழிக்க ரூ.60 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மண்புழு உரம் தயாரிப்பு
இதுதவிர வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு செல்லும் குப்பைகளை குறைக்கும் வகையில் மாநகரில் 33 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
இங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடங்கள் மூலம் வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு செல்லும் குப்பைகள் 400 டன் அளவிற்கு குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.