போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
கோவை மேட்டுப்பாளையம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 22). இவரது வீட்டின் அருகே 9 வயது சிறுமி வசித்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி சிறுமி, அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது வேலுசாமி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார். இதையடுத்து வேலுசாமி, சிறுமியிடம் இங்கு நடந்ததை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டல் விடுத்தார்.
6 ஆண்டு சிறை
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேலுசாமியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், கைதான வேலுசாமிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.