காதல் தம்பதி கோவில் விழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து 6 பெண்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

காதல் தம்பதி கோவில் விழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து 6 பெண்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-27 20:50 GMT

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் வேப்பமரத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. கோவில் கும்பாபிஷேகத்திற்காக அந்த கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களிலும் வீட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 37) என்பவர் பறையப்பட்டியில் வேறு சமூகத்தை சேர்ந்த சுதா (30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் விழாக்குழுவினர் சுரேஷ் குடும்பத்தினரிடம் கோவில் விழாவுக்கு வரி வாங்கவில்லை. இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுதா பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

தற்கொலை முயற்சி

இதனால் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரச்சினை வரக்கூடும் என்பதற்காக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வம் முன்னிலையில் கோவில் திருவிழாவுக்கு வரி வாங்க மறுத்தது தொடர்பாக இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

இதனிடையே காதல் தம்பதி சுரேஷ், சுதா ஆகியோர் குடும்பத்தினர் கோவில் திருவிழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி ராமு (வயது 35), மற்றொரு முருகன் மனைவி கவிதா (38), அனுமந்தன் மனைவி அலமேலு (36), மாதேஷ் மனைவி தேன்மொழி (35), ரமேஷ் மனைவி அமுதா (35), அசோகன் மனைவி விஜயா (23) ஆகிய 6 பேரும் கோவில் அருகே பாயாசம் செய்து அதில் விஷம் கலந்து குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் வேப்பமரத்தூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சுரேஷ் தரப்பினர் திருவிழாவில் கலந்து கொள்ள ஆட்சேபனை இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று (புதன்கிழமை) கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்