ரஷிய விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தாம்பரம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 6 பேர் தேர்வு

ரஷிய விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தாம்பரம் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் வருகிற 9-ந்தேதி பயணம் செய்ய உள்ளனர்.

Update: 2023-07-28 04:34 GMT

பல்லாவரம், 

விஞ்ஞானி சிவதானு பிள்ளை அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் ஆன்லைன் மூலமாக ஏவுதல அறிவியல் பயிற்சி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற்றனர்.

முதலில் 500 பேராக பயிற்சியில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு 4-வது கட்டமாக காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ரோகித், முகமது சாதிக், ரக்ஷித் ஆகிய 3 மாணவர்கள் மற்றும் லத்தாஷா, இலக்கியா, லித்திகா ஆகிய 3 மாணவிகள் என 6 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ஆனால் இவர்களில் 4 பேருக்கு மட்டும் ரஷியா செல்ல பல்வேறு தரப்பினர் மூலம் நிதி உதவி கிடைத்தது. லித்திகா மற்றும் இலக்கியா ஆகிய 2 மாணவிகளுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை.

இதையறிந்த பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, அந்த 2 மாணவிகளும் ரஷியா சென்று வர ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாக கூறினார். இதற்காக ரூ.3 லட்சத்தை தன் சொந்த நிதியில் இருந்து வழங்கியதுடன், நன்கொடையாளர்களிடம் இருந்து மேலும் ரூ.1 லட்சம் பெற்று கொடுத்தார்.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷியா செல்லும் மாணவ-மாணவிகள் 6 பேருக்கும் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து பாராட்டிய கருணாநிதி எம்.எல்.ஏ., மாணவிகள் 2 பேருக்கும் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதில் மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை, பள்ளி தலைமை ஆசிரியை அருண்மொழி, முன்னாள் தலைமை ஆசிரியை சுதா, அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அரசு பள்ளியில் படித்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளை ஏராளமானவர்கள் பாராட்டினர்.

ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட தமிழகம் முழுவதும் 75 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நிதி உதவி கிடைக்காமல் முதல் கட்டமாக 50 பேர் மட்டுமே வருகிற 9-ந்தேதி ரஷிய விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற 25 பேரும் அடுத்த ஆண்டு மே மாதம் அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி வருகிற 9-ந்தேதி சென்னையில் இருந்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50 மாணவ-மாணவிகள், 10 ஆசிரியர்கள் ரஷிய விண்வெளி மையத்தை பார்வையிட புறப்பட்டு செல்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்