கைதிகளை கொல்ல முயன்ற 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கைதிகளை கொல்ல முயன்ற 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-08 19:27 GMT


திண்டுக்கல் மாவட்டம் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பூண்டு வியாபாரி சின்னத்தம்பியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜா, விக்னேஸ்வரன் ஆகிய 2 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் விருதுநகர் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி 22-ந் தேதி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். திண்டுக்கல் ஆயுதப்படை போலீசார் இவர்கள் பாதுகாப்புக்காக பணி அமா்த்தப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த கும்பல் காரில் வந்து அரசு ஆஸ்பத்திரியில் அத்துமீறி நுழைந்து போலீசார் மீது மிளகாய் பொடி தூவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த யுவராஜா, விக்னேஸ்வரனை கொலை செய்ய முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டியதும் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதனைத்தொடர்ந்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல்லை சேர்ந்த விஜி என்ற விஜயன் (வயது 30), பிரபாகரன் என்ற கொடி அருண் (30), அழகர்சாமி என்ற பெரியவர் (33), சரவணன் என்ற சரவணபாண்டி(28), போத்தி ராஜா என்ற போத்திராஜன்(24), தங்கமலை(27) ஆகிய 6 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேற்படி 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பரிந்துரைத்ததின் பேரில் கலெக்டர் ஜெயசீலன் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் மேற்படி 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்